சுகம் தரும் சொர்க்கம் என்று கருத்தில் கொள்வார்,
கண்டேன் சீதையை என்று காகுத்தனிடம் சொன்ன,
கருணை மிகு ராமபக்தன் ஆஞ்சநேயர் பெருமை இது.
அஞ்சனை தனையன் அலைகடல் தாண்டவே,
ஆயத்தமாகி நின்றார் ராம பாணம் போல்,
ராசஷஸர் மனைநோக்கி ராஜ கம்பீரத்தோடு,
ராமதூதனும் விரைந்தே சென்றார்.
அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்,
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே !
வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள்,
வழியெல்லாம் நின்று பூமாரி பொழிந்தனரே !
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க,
மகிழ்வுடன் மாருதியும் மைநாகத்தை திருப்தி செய்து,
ஸுரசையை வெற்றி கொண்டு ஸிம்ஹிகையை வதம் செய்து,
சந்தோஷமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தார்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை,
இடக்கையால் தண்டித்தவன் இதயத்தைக் கவர்கின்றார்,
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை,
அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டார்.
சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்,
சீதாப்பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினார்,
ராவணன் வெகுண்டிட ராசஷஸியர் கலங்கிட,
வைதேகி மகிழ்ந்திட வந்தார் துயர்துடைக்க.
கணையாழியைக் கொடுத்து ஜயராமன் சரிதம் சொல்லி,
சூடாமணியைப் பெற்ற சுந்தர ஆஞ்சநேயர்,
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கன் மேல் கோபம் கொண்டு,
அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தார்.
பிரம்மாஸ்திரத்தினால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்,
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க,
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்,
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமனும்,
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டார்,
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயர் தாவி வந்தார்,
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய்மறந்தார்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்,
கைகூப்பிக் 'கண்டேன் சீதையை' என்றார்,
வைதேஹி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணி அளித்தார்.
மனம் கனிந்த மாருதியை மார்போடணைத்த ராமர்,
மைதிலியை சிறைமீட்க மறுகணம் சித்தமானார்,
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டிப் படைகள் சூழ,
அனுமனும் இலக்குவனும் உடன்வரப் புறப்பட்டார்.
அழித்திட்டார் ராவணணை, ஒழித்திட்டார் அதர்மத்தை,
அன்னை சீதாதேவியை சிறைமீட்டு அடைந்திட்டார்,
அயோத்தி சென்று ராமர் ஜகம் புகழ் ஆட்சி செய்தார்,
அவனைச் சரணடைந்தோர்க்கு அவர் அருள் என்றும் உண்டு.
எங்கெங்கு ரகுராமன் கீர்த்தனமோ அங்கெல்லாம் கரம் குவித்து,
மனம் உருகி கண்களில் நீர் சொரிந்து, ஆனந்தத்தில் மூழ்கி,
கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயா - உன்னைப்
பணிகின்றோம் !! பன்முறை உன்னைப் பணிகின்றோம் !!

